நாளை வதுவை மணமென்று நாளிட்டு.....

வாரணமாயிரம் சூழ வலம் செய்து

நாரணன்நம்பி நடக்கின்றான் என்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.



நாளை வதுவை மணமென்று நாளிட்டு

பாளைகமுகு பரிசுடைப் பந்தற்கீழ்

கோளரிமாதவன் கோவிந்தன் என்பானோர்

காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.



இந்திரனுள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்

வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து

மந்திரக் கோடி உடுத்தி மணமாலை

அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.



நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனி நல்கி

பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி

பூப்புஉனை கண்ணிப் புனிதனோடு என்று அன்னை

காப்பு நான் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.



கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி

சதிர் இள மங்கையர்தாம் வந்தெதிர் கொள்ள

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்

அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.



மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்



வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,

பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,

காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,

தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்.



இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,

நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,

செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,

அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.



வரிசிலை வாண் முகத்து என்னைமார்தாம் வந்திட்டு

எரிமுகம் பார்த்து என்னை முன்னே நிறுத்தி

அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்து

பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.



குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து

மங்கலவீதி வலம்செய்து மணநீர்

அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல்

மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.



ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை

வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்

தூய தமிழ்மாலை இரைந்தும் வல்லவர்

வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே.